உலகில் ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் எல்லாம் இறுதியில் ஏதோ ஒரு சக்தியால் தீர்க்கப்பட்டுள்ளதை பல தடவைகள் வரலாற்றில் கண்டுள்ளோம். அது இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இருக்கலாம். ஆனால் அதுவே ஒரு நபராக வரும்போது, அவர் பலவிதமாக அழைக்கப்படுகிறார். அவரால் நன்மையடைபவர்களுக்கு தலைவன்; தீமையடைபவர்களுக்கு சாத்தான்; மதநம்பிக்கை உடையவர்களுக்கு கடவுளின் அவதாரம் என்று பல பெயர்களைப் பெறுகிறார். எவ்வாறாயினும் அவ்வாறு ஒருவர் தோன்றுவார் என்ற நம்பிக்கையை மதநூல்களும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுமே முன்கூட்டியே அறியத்தருகின்றன. அவ்வாறு பலவிதமாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ள, இந்து சமயத்தில் கல்கி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு நபரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்வோம்.
இந்து சமயப்படி காலம் பல்லாயிரக் கணக்கான வருடங்களைக் கொண்ட 4 யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒவ்வொன்றிலும் நல்லவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எனவும் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் இந்துக் கடவுளான விஷ்ணு 10 முறை உலகில் அவதரித்து சிக்கல்களைத் தீர்ப்பார் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு 9 அவதாரங்கள் ஏற்கனவே நிறைவுற்று, இறுதியாக கல்கி அவதாரம் எஞ்சியுள்ளது. இது நான்காவது யுகமான நாம் வாழும் அதர்மங்கள் தழைத்தோங்கிய கலியுகத்தின் இறுதியில் தோன்றுமென பகவத்கீதை, விஷ்ணு புராணம் மற்றும் கல்கி புராணம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதைவிட இவ்வாறு ஒரு சக்திமிக்க நபர் தோன்றுவார் என்பது ஏனைய பல மதநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் அவர் தோன்றுவதற்குக் காரணமான சிறப்பம்சங்கள் சில.
1. மக்களைக் காக்க வேண்டிய தலைவர்களே மக்களின் பணத்தைச் சுரண்டுதல்.
2. மக்கள் இயற்கையை அளவுக்கதிகமாக பயன்படுத்தி சீரழித்தல்.
3. உலகம் வணிகர்களால் ஆளப்படல்.
4. செல்வந்தர்கள் வறியவர்கள் என இரு துருவங்கள் காணப்படல்.
5. நியாயம், தர்மம் என்பன வெறும் வார்த்தைகளாக இருத்தல்.
6. உயிரினங்கள் அதிகமாக உணவாக உட்கொள்ளப்படல்.
7. பெண்கள் விரைவாகப் பருவமடைதல்.
8. நதிகள் வற்றிப்போதல்
9. பணபலம் உள்ளவர்கள் கடவுளாகப் பார்க்கப்படல்.
10. மக்களின் கடவுள் நம்பிக்கை குறைதல்.
கல்கி, ஷாம்பலா எனும் ஊரில் கடவுள்பக்தி நிறைந்த தந்தைக்கும் அன்பு நிறைந்த தாய்க்கும் பிறப்பார். இவர் கல்வி, விளையாட்டு அனைத்திலும் சிறந்து விளங்குவார். சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும், உதவ வேண்டும் போன்ற நல்லெண்ணங்களைக் கொண்டிருப்பார். கோபமும் போர்க்குணமும் இவரிடம் காணப்படும். சிங்கள தேசத்துப் பெண்ணை மணந்து கொள்வார். விஷ்ணுவின் முந்தைய அவதாரங்களுள் ஒன்றான சாகாவரம் பெற்ற பரசுராமரிடம் உலகநியதிகளைக் கற்றுக் கொள்வார். பறக்கக்கூடிய வெண்குதிரை மற்றும் வாள் வைத்திருப்பார். உலகிலுள்ள தீயவர்களை அழித்து அமைதியை நிலைநாட்டுவார். இது இந்து சமயப் புராணங்களில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதன் சாராம்சம்.
மூன்று பெரிய நீர்நிலைகள் சந்திக்கும் இடத்தில் பிறக்கும் ஒருவர், ஒரு கடலின் பெயரைக் கொண்ட மதத்தைப் பின்பற்றுவார். இவர் வியாழக்கிழமையை புனித நாளாக வணங்குவார். இவரது வீரத்துக்கும், அறிவாற்றலுக்கும் அனைவரும் கீழ்ப்படிவர். இவர் மதத்தை வைத்து பிரிவினை செய்ய முயல்வோரையும் , மக்களைச் சுரண்டும் கபடதாரிகளையும் அழித்து முழு உலகையும் ஆக்கிரமிப்பார். மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட அமைதியான உலகை அமைப்பார். இவை பிரபல தீர்க்கதரிசியான Nostradamus இன் கருத்துக்கள். இதை ஆய்வு செய்த பல நாட்டவர்களும் அந்த இடம் தென்னிந்தியா எனவும், அந்த மதம் இந்து சமயம் எனவும் கூறுகின்றனர். மேலும் இந்து சமயத்தவர் விஷ்ணுவை வழிபடும் நாள் வியாழன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவரும் கல்கி அவதாரத்தைப் பற்றிக் கூறியிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
இந்து சமயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஹிட்லர் கல்கி அவதாரம் பற்றி அறிந்து கொண்டு, இந்தியாக்கு இரகசிய தூதர்களை அனுப்பி ஷாம்பலா எனும் இடத்தைத் தேடியதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறிருப்பினும் இன்றுவரை அப்பெயரில் ஒரு ஊர் கண்டுபிடிக்கப் படவில்லை. கலியுகம் முடியும் காலம் பற்றியும் இன்னும் விவாதங்கள் இடம்பெறுகின்றன. ஒருவேளை கல்கி பிறந்து விட்டாரோ என்றும் ஆராயப்படுகிறது. வேண்டுமானால் மேலே பட்டியலில் உள்ள சிறப்பம்சங்களில் எத்தனை இன்றைய காலத்துடன் ஒத்துப் போகின்றன என்று நீங்களே சிந்தித்துப் பார்த்து கல்கி இன்று உள்ளாரா இல்லையா என்று முடிவு செய்யலாம்.
No comments:
Post a Comment